Sunday, September 18, 2005

கண்டவைகளும் காணப்போவதும்

உலகெல்லாம் பரவிய உன்மத்தத்தின் பிரமையில் மக்கள் கல்லுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார்கள்.

வருடம் ஒரு முறை இவர்கள் படைக்கும் கொழுக்கட்டைகளின் அஜீரணத்தில் அவதிப்படும் பிள்ளையாருக்கு பேதி மருந்து கொடுத்தது போல் பிள்ளையார் சிலைகளின் எண்ணெய் பிசுக்கில் கலங்களாய் தேங்கிக் கிடந்தது பால். நம்பிக்கை எனும் ஏவலில் கட்டுண்டு மனிதர்கள் அனைவரும் பால் குடிப்பதைப் பார்க்க கோவில்களில் கூடியிருந்தனர். இவர்களில் பலர் பகுத்தறிவு பேசும் பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள், நீதிபதிகள் மற்றும் ஆசிரியர்கள். வேதாந்தத்திற்கு வியாக்கியானங்கள் செய்யும் பிரபலமானவர்கள் பலர் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்கள், "கடவுள் தன்னை இப்படி வெளிப்படுத்த விரும்புகிறார். இது உண்மை என நம்பத்தான் வேண்டும்." பத்திரிக்கைகள் இதை பிரசுரித்துத் தங்கள் கடமையைச் செய்தன. ஆனால் அவர்? வழக்கம்போல தன் உணர்தலின் அடிப்படையில் அவரது பதில். கேள்வி கேட்ட அன்பர்களிடம் இவ்வாறு கூறினார். "எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை உணவில்லாமல் வாடுகின்றன. தாய்ப்பால் தவிர வேறு பால் இருக்கின்றது என்பது தெரியாமல் பல குழந்தைகள் வளர்கின்றன. இங்கே இவர்கள் கொட்டி வீணாக்கும் பாலை அவர்களுக்குகெல்லாம் கொடுத்தால் பிள்ளையார் உண்மையில் இவர்களை ஆசிர்வதிப்பார்." பரபரப்பைத் தூண்டாததால் இவரது இந்த கருத்து பத்திரிக்கைகளில் வரவில்லை.

* * இந்திராகாந்தியின் பெயரில் அமைந்த பெரு மதிப்பு வாய்ந்த பட்டத்தை முதன் முதலில் அவருக்கு வணங்கி அரசாங்கம் பெருமை பட்டுக்கொண்டது. இவருக்குப் பின் அந்த பட்டம் பெற்றவர்களெல்லாம் சொல்லிக் கொண்டார்கள், "அவருக்குக் கொடுத்த பட்டத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்".

* * UNESCO அவரை உலகம் முழுவதுமான இந்திய கலாச்சார தூதுவர் என அடையாளம் கண்டு சந்தோஷப்பட்டது.

** டெல்லிக்கு பலர் காவடியெடுத்துக்கொண்டு பாராளுமன்ற தாழ்வாரங்களில் தரகர்களைக் கொஞ்சிக்கொண்டிருந்த போது, ஏழெட்டு முறை பத்மபூஷன் விருது இவரது வாசலில் ஏமாற்றத்தோடு கௌரவத்தைத் தேடி காத்துக்கிடந்தது. பெரிய பெரிய தலைவர்கள் வேண்டியும் வற்புறுத்தியும் அவர் அதை மறுத்துவிட்டார். அவருக்கு வேறு முக்கியமான வேலைகள் இருந்தன.

* * அவர் அந்தப் பணியாளருக்கு செயல் முறையில் விளக்கிக்கொண்டிருந்தார். "இதோ பார்! இப்படித்தான் கக்கூஸை சுத்தம் செய்ய வேண்டும்". அப்போது அவர் உலகமெங்கும் பரவியிருக்கும் அந்த சேவை அமைப்பின் மிகப்பெரிய தலைவர். அவர் என்றுமே முக்கியமான வேலைகளைச் செய்யாமல் இருந்ததில்லை.

* * அவருடைய பேச்சினைக் கேட்பதற்க்காக தங்களுடைய முக்கியமான வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு நாட்டின் பெரிய தலைவர்கள் காத்திருந்தனர். அவர்களில் இந்திராகாந்தியும் ஒருவர்.

** "அய்யா! இதை எழுத இப்போது நான் வெட்கப்படுகிறேன். கல்லூரி கலாச்சாரமாக கருதப்பட்ட பல கீழான விஷயங்களை நான் முன்னின்று நடத்திவந்தவன். நான் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கியதேயில்லை. அதைச்செய்யும் மற்ற மாணவர்களைக் கேலி செய்வதும் அவர்களை இதுபோல் கீழான செயல் செய்யும்போதும் பாராட்டிக்கொண்டிருந்தேன். ஆனால், அன்று உங்கள் சொற்பொழிவைக் கேட்டபின்னால் இது போன்ற செயல்களைச் செய்ய வெட்கப் படுகிறேன். குற்ற உணர்வு என்னைக் கொல்கிறது. என்னால் பெரியதாக வேறெதுவும் செய்ய முடியாது. ஆனால், ஒரு நல்ல மனிதனாக வாழ்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது." அவருக்கு வந்த கடிதங்களில் ஒன்று.

* * தமிழகத்தில் இருந்துகொண்டு உலக முழுவதும் தங்கள் 'பார்சல் சர்விஸ்'களை செய்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்தினர் அவருக்கு மிக விலையுயர்ந்த கடிகாரத்தைப் பரிசாக வழங்கினர். அதில் தங்கத்தைத் தவிர வேறு எந்த உலோகமும் உபயோகப் படுத்தவில்லை. உள்ளங்கை அகல அந்த கடிகாரத்தில் சின்ன சின்ன ஸ்ப்ரிங்குகள் கூட தங்கத்தால் ஆனாது. அதை அந்த சேவை மையத்தில் புதிதாகச் சேர்ந்த ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்.

** சில சமயங்களில் அவர் நேர்மையற்றவராகயிருந்தார். அவரது உதவியாளருக்கு இவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. "ஆனால், இந்த போர்வை மிக மிக விலையுயர்ந்தது." "see! அந்தப் பையன் நன்றாகப் படிக்கிற பையன். குளிர் காலத்தில் அவனுக்கு அது உபயோகமாக இருக்கும். அவனிடம் கொடுத்து விடு." "ஆனால், உங்களுக்கு இந்த போர்வையை பக்தியோடு கொடுத்தவர்கள் வாசலில் தான் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இதை எப்படி அந்த பையனுக்குக் கொடுப்பது?" "அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? இதை அவர்களுக்குத் தெரியாமல் அந்த பையனுக்குக் கொடுத்துவிடு" அந்த திருட்டுத்தனம் நடந்தது. அவரால் கல்வி பெறும் பல மாணவர்களில் ஒருவனான அந்தச் சிறுவனுக்கு இனி குளிர்காலங்கள் வேதனையான நாட்கள் இல்லை.

* * அவருடைய கருத்துகளைக்கேட்டு பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை அற்பணித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கை முழுவதையும் அற்பணிக்காவிட்டாலும், தங்களாலானவற்றை செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு வக்கில் சேரி வாழும் மக்களுக்கு மட்டுமே பணி செய்வது என்று குடும்பத்தோடு சேரியில் வாழ்கிறார். ஒரு மிகப்பெரிய மருத்துவர் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகளுக்கு இலவசமாகப் பயிற்சியளித்துக்கொண்டிடுக்கிறார். இவரால் பலர் தற்போது டாக்டர்களாகவும் இஞ்சினியர்களாவும் உள்ளனர். இந்த மருத்துவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்த உலகம் விசித்திரமானது. உண்மையே வாழவைக்கும் என்று தெரிந்தும், பொய்மைகளின் பலத்திற்கு முன்னால் உண்மை உதவாது என்று தெரிந்துகொண்ட நடைபிணங்கள் வாழுமிடமிது. தங்களிடமிருக்கும் மதிப்பு மிகுந்த நவரத்தின நகைகளை பிணத்திற்குப்போட்டு பிணத்தின் நக அழுக்கைப் புசித்துப் பூஜிப்பதைக் கலாச்சாராமாக்கி விட்டார்களே உயர்ந்தவர்கள் எனப்படுகின்றனர். அல்லது கருணையின் வடிவமாக உலகமுழுவதும் பெயர் பெற்ற வேறு சிலர் இவர்களது கருணை தங்களது நம்பிக்கைகளை ஒத்துக்கொண்டவர்களுக்கு மட்டும் தான். இவர்களுக்கு நடுவில் 'தோட்டிச்சாமியர்கள்' என்று மற்ற சனாதனிகளால் வெறுக்கப்பட்ட அந்த குழுவில் தன்னை இணைத்துக்கொண்ட அவரது இயற்பெயர் சங்கரர்.



சங்கரர்கள் கேரளாவில்தான் அவதரிக்கிறார்கள். பரபரப்பையோ, ஓட்டுகளையோ பெற்றுத்தராத இவர் இறந்தது இந்த வருடம்(2005) ஏப்ரல் மாதம் 25ம் தேதி. இவரை உங்களுக்குத் தெரியாது. அது அவரது விருப்பமல்ல; அவரது விருப்பம் உறுதியான, நேர்மையான மனிதர்களை விளையவைப்பதே. அதுவே அவர் வாழ்வின் பயன். சுவாமி ரங்கநாதானந்தர் என்ற பெயரில் மறைந்த இவர், தன் வாழ்வை ராமகிருஷ்ண, விவேகானந்த கருத்துக்களுக்கே அர்ப்பணித்தவர். சாமியார்கள் என்றாலே ஆனந்த விகடனின் ஜோக்குகளில் ஒன்றாகிவிட்ட வெறும் நகல்களுக்கு நடுவில் உண்மைகளும் உலாவருகின்றனர். அடையாளம் காணமுடியாதது நம் பலவீனம். ஆனாலும், நீங்கள் இவரை மீண்டும் சில இடங்களில் சந்திக்க முடியும். அங்கே குழந்தைகளின் பசிக்குப்பாலுண்டு.

0 Comments:

Post a Comment

<< Home